சிறுகதைகள்

பொன்னூத்து

    முன்னூட்டம்: இருபது ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த சிவக்கொழுந்து அண்ணன்..பொன்னூத்து மாசாணங்குடி.. சின்னஞ்சிறிய மலைக்கிராமத்தினில்… ஒயாத மழைச்சாரலோடும்.. ஒரு பதினைந்து நாட்கள்.. மனிதம் எனும் ஈரத்தை நெஞ்சம் நெகிழ என்னுள் நான் உணர்ந்த தருணங்கள். இந்தப்படைப்பு சிவக்கொழுந்து அண்ணனுக்காக.. ராமலட்சுமிக்காக.. சங்கரப்ப‌னுக்காக..

    _______________________________________________________________________

    நுணாத்தி புதுத் தளிர் விட்டு தழைத்து இருந்தது. பார்த்ததும் மகிழ்ந்து போனான் சிவக்கொழுந்து.

    மழை வச வசவென்று தூறிக்கொண்டு இருந்தது. மேலே சாக்குத் தடுப்பைத் தூக்கிக் கட்டி வைத்து விட்டு முழங்காலை குத்த வைத்து அமர்ந்தான். மூட்டு வலிக்கு இதமாக இருந்தது. கீழே எட்டிப் பார்த்தான். கங்காணி வீட்டில் புகை வந்து கொண்டிருந்தது.

    “ஏஏ.. கங்காணி..வூட்ல இருக்கியா..” இங்கிருந்து கீழே எக்கி சத்தம் போட்டான்.

    “வூட்ல தான்..கெடக்கன்டே.‌.நீ.. கூலிக்குப் போகல்ல…?” கங்காணியிடமிருந்து பதில் வந்தது.

    “இம்புட்டு மழையில எவன் ரோடு போடறான்..கீழ பழையூத்துல வேல நடக்ககற மாதிரி தெரில.. இன்னிக்கு தான் மூட்டு வலி கொஞ்சம் காணல..” காலை மெல்ல நீட்டி நெட்டி முறித்து எழுந்தான் சிவக்கொழுந்து.

    கடல் மட்டத்திலிருந்து ஆறாயிரம் அடியில்  உசரத்தில் இருந்தது பொன்னூத்து மாசாணங்குடி. ஒரு முப்பது குடும்பங்கள் வடக்கு முகட்டில் இருந்து தெக்கு சரிவுல குடிசைகள் போட்டு கீழயும் மேலயும் இருந்துச்சு. முகட்டில் சிவக்கொழுந்து குடிசை ஒரு பெரும் பாறையின் அகட்டு வாக்கில் தகரத் தட்டுக்களை பாறை இடுக்குகளில் இருந்து நீட்டி அதன் மேல் பாக்கு மட்டையும் தென்னங்கூரையும் வேய்ந்து நல்ல சாக்குப் படுதாவைக் காத்து புகாமல் நெலெக்கதவோடு கட்டி இருந்தது.

    முகட்டில் இருந்து தெக்குச் சரிவில் ஒரு அரை ஏக்கர் நெலம் இருக்கும். சிவக்கொழுந்துவின் அப்பன் மாசாணத்துக்கு அரசாங்கம் பட்டா போட்டுக் குடுத்த நெலம். கெழங்கும், கானாம் பயிறும் வருசம் முச்சும் வெளயும். பத்து முப்பது மூங்கில் மரமும், அங்கங்கே படர்ந்து கிடக்கும் ஒரு முப்பது கொத்து ஏலக்காய் கொடிகளும் லைசென்ஸ் வாங்கி வளத்து வர்ற நாலஞ்சு தேக்கு மரமும் சிவக்கொழுந்துவுக்கும் அவன் அக்கா நெறஞ்சபொண்ணுக்கும் சொந்தம்.

    அவள் கீழ்கரட்டுல தான் கல்யாணம் ஆகி புருசன் கூட இருக்கா. தெக்கு சரிவுல எறங்கி நடந்தா ஒரு நாலு மணி நேரத்துல கீழ பழையபாறை தாண்டி..மேல் கரடு தாண்டி மெயின் ரோடு புடிச்சி..லோடு லாரி ஏறுனா அவ வூட்ல இறங்கிக்கலாம்.

    ரேசன் அரிசி டப்பாவை திறந்து பார்த்தான். அரிசி கொஞ்சம் வீச்சம் அடித்தது. ஒரு வெள்ளை வேட்டியை உதறி மூலையில் ஈரம் படாது விரித்து விட்டான். அரிசியைக் கொட்டிப் பரப்பி விட்டான். சொரைக்குப்பியை எடுத்துக் கொண்டு சோப்புக் கட்டியயையும் ஈரல் துண்டையும் எடுத்துக் கொண்டு மேல் சுனைக்கு குளிக்க கிளம்பினான்.

    மேல் முகட்டில் சிவன் பாறை மொனையிலிருந்து வழியும் சுனை நீர் தான் இங்கு இருக்கும் அத்தனை குடும்பங்களுக்கும்.. குளிக்க..குடிக்க.. சமைக்க எல்லாத்துக்கும். வத்தாத சுனை தண்ணீர் அவ்வளவு தித்திப்பு.

    போகும் வழியில் மேல் காட்டில் கிழங்கு எப்படி இருக்கிறது என்று ஒன்றிரண்டை இழுத்து அசைத்துப் பார்த்தான். வர்ற மாசி மாசம் தோண்டுனா சரியாக இருக்கும். காட்டுப் பன்றிகள் இந்த தடவை பங்கம் பண்ணாது. நாலு சரிவும் நல்ல மழை . எல்லாப் பக்கங்களிலும் ஈரம்.காட்டு உசுருங்களுக்கு அங்கங்கே பச்சையம் நெறயக் கிடக்கு.. மனதுக்குள் பேசிக்கொண்டே நடந்தான்.

    ஏலக்காய் கொத்துக்களை காட்டு எலிகள் ஆங்காங்கே கொஞ்சம் பிய்த்துப் போட்டு இருந்தது.. உதிர்ந்து ஓரளவுக்கு உருப்படியாக இருந்த ஏலக்காய்களை பொறுக்கி மேல் துண்டின் நுனியில் முடிந்து கொண்டு இருக்கும்போதே மெல்லத் தூறத் தொடங்கியது. சுனைக்கு வந்து சேர்ந்து இருந்தான்.   சுனைக்குளத்தில் முங்கி எழுந்தான்.. அவ்வளவு உற்சாகமாக இருந்தது. குளித்து முடித்து வேட்டி துண்டை துவைத்து பிழிந்து இரண்டு மரங்களுக்கு இடையே கட்டி விட்டு சிவன் பாறையை கூட்டி சுத்தம் செய்தான்.

    இந்த சிவன் பாறை கோயிலுக்கு சிவக்கொழுந்துதான் படையாச்சி வரிசை வந்த வாரிசு. சிவக்கொழுந்து, அவன் அப்பன் மாசாணம், பாட்டன் தவசியாண்டி..வழி வழியாக வந்த உரிமை இது.. முப்பது குடும்பங்களுக்கும் குறி சொல்லி நல்லது கெட்டது பார்க்கும் பெரிய தனமான தலக்கட்டும் கூட. இந்த மாசி வந்தால் சிவக்கொழுந்துக்கு நாப்பத்தஞ்சு வயதாகிறது.. இதுவரை கல்யாணம் ஆகவில்லை.. இவனுக்குப் பிறகு யார் குறி சொல்வது..சாமி ஆடுவது..ஊரு கூடும்போது இந்தப் பேச்சும் இப்போது அடிக்கடி வருகிறது. சிவக்கொழுந்து வேதனையுடன் அந்த வார்த்தைகளைக் கடக்க இயலாமல் வெம்பிப் போவான்.

    கங்காணி இவனுக்கு மாமன் மொற தான். அவரு மக ராமலட்சுமியை சிவக்கொழுந்துக்கு கட்டறதாதான் ரொம்ப நாள் பேச்சு இருந்தது. ஒரு பத்து வருசம் முந்தி கல்யாணத்துக்கு இவனும் அவ மேல பெரும் உசுராத்தான் இருந்தான். அப்படி இருக்கும் போது பழையபாறையில ரோடு போடற வேல ஆரம்பிச்சது.. கங்காணிக்கு ரோடு போடற மேஸ்திரி யோட வசதி தோரணை எல்லாம் பாத்து பெரிய ஆசை வந்துடுச்சு…காசு..பணம்…சின்ன டவுன்ல மச்சு வீடு.. எதுவும் இவங்க கிட்ட சொல்லல.. கல்யாணத்துக்கும் சொல்லல…

    திடீர்னு குறி கேட்கனும்னு வந்தாங்க..இவனும் சோழிய முன்னப் பின்ன மாத்தி மாத்திக் கணக்கு பண்ணி உருட்டி போட்டான்..செரியா வர்ல.. சிவக்கொழுந்து தயங்கறத கங்காணி ஒரு பொருட்டாகவே எடுத்துக்கிடல..

    “இவன் ராமலட்சுமியை கல்யாணம் கட்டிக்கிடறதுக்கு ஆசப்படறான்.. அதுனால வேணும்னே மென்னு முழுங்கறான்…” என்று சொல்லி ஒன்றிரண்டு வாரத்தில் அவள் கல்யாணத்தை முடித்து விட்டான் கங்காணி.

    பைத்தியம் பிடித்தது போல் ஆகி இருந்தான் சிவக்கொழுந்து. திடீரென்று ஓவென்று அழுவான். எல்லாம் போட்டபடி போட்டுவிட்டு சிவக்கொழுந்து ஒரு வருசம் அவன் அக்கா நெறஞ்சபொண்ணு வீட்டில் போய் தங்கி விட்டான்.

    அவளும் சிவக்கொழுந்தை அவ்வளவு பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் மனம் பக்குவப்பட்டது சிவக்கொழுந்துவுக்கு. அவனுக்கும் கல்யாணம் முடிக்க அவள் அக்காவும் மாமனும் அவ்வளவு முயற்சி செய்தும் இவன் முடியாது என்று ஒத்தக்காலில் நின்று இந்த மாசி வந்தால் பத்து வருசம் ஓடிப்போய் விட்டது.

    சிவக்கொழுந்து வரும் வழியில் சுள்ளிகள் பொறுக்கி எடுத்து வந்து இருந்தான். வீட்டு முன் வளர்ந்து அடர்ந்திருந்ந கொய்யா மரத்தின் காய்ந்த சுள்ளிகளாக ஒரு பொதி உடைத்து வீட்டுக்குள் கொண்டு போட்டான். கொஞ்சம் அரிசியை காட்டுக் கோழி படப்புக்குள் தாழியில் வைத்து விட்டு தண்ணீர் மாற்றி வைத்தான். அடுப்பில் சுள்ளிகளை நிரப்பி பற்ற வைத்தான். சட்டென்று பற்றிக் கொண்டது. அரிசியை நன்கு கழுவி ஒண்ணுக்கு மூணு தண்ணி அளந்து வைத்து கொஞ்சம் உப்பு போட்டு ஒரே கஞ்சியாகக் கொதிக்க விட்டு வெளியே வந்து பார்த்தான். பெரண்டையை பறித்து துவையல் அரைக்கலாமா என்று நினைத்து முடைப்பட்டுக் கொண்டான்.

    “கங்காணி அம்மா.. வூட்ல இருக்கியா..” வீட்டில் சத்தம் வரவில்லை.

    இருந்தால் பழைய சுண்டிய சாறு குழம்பு ஏதாவது கேட்டுப் பார்க்கலாம் என்று பார்த்தால் காட்டுக்குள் இருப்பார்கள் போல் இருந்தது. வெறும் கஞ்சியைக் குடிக்க முடியாது. சட்டென்று மனதில் ஒரு யோசனை தோன்றியது. படபடவென்று வேலி ஓரம் படர்ந்து இருந்த பண்ணைக் கீரையை வெட வெடவென்று அறுத்து..சட்டியில் எண்ணெய் விட்டு காட்டுப் பூண்டையும் வெங்காயத்தையும் தட்டிப் போட்டு கொதிக்க விட்டான். கொஞ்சம் நேரத்தில் கீரை மசிந்து மை போல் ஆகி விட்டது. கஞ்சி கொதித்து இறக்கவும் சரியாக இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. கும்பாவில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு

    வெஞ்சனச் சட்டியில் கீரை மசியல் எடுத்து வந்து வெளியில் கட்டிலில் உட்கார்ந்தான். கீழே பேச்சுச் சத்தம் கேட்டது.

    “ஏலவே.. சிவக்கொழுந்து.. கஞ்சி குடிச்சியா..” கங்காணித்தா ளின் குரல் கேட்டது.

    “ஆ.. கொஞ்சம் முன்னத்திதான் வயிறு நனஞ்சது..” சிவக்கொழுந்து பதில் சொன்னான்.

    “ராத்திரி பொழுதுக்கு இங்க கஞ்சிக்கு வந்துருடே..களி கெளறி காட்டுக்கோழி சாறு வெக்கேன்..”

    கங்காணித்தாளுக்கு மூட்டு வலிக்கு இவன் தான் எண்ணெய் காய்ச்சி தந்து வைத்தியம் பாக்குறான். இவன் மேல எப்பவும் பிரியமா இருப்பாள். புள்ளய இங்குட்டு இவ்வளவு பக்கத்துல கைக்கு அடக்கமாக குடுக்க இந்த சம்பந்தம் குதுருலயேன்னு இன்னும் மனசுக்குள் குமஞ்சுகிட்டு கிடக்கா கிழத்தி.

    ராப்பொழுது சட்டுன்னு மங்கிடும். அம்புட்டு சுளுவா ராக்கழியாது. ரேடியோ பெட்டியில் மலையாள மொழியில் தட்டுப்பட்ட ஸ்டேஷனை வைத்து விட்டு கயித்துக் கட்டிலில் காலை ஆட்டிக்கொண்டு படுத்திருந்தான் சிவக்கொழுந்து.

    கங்காணி கள்ளு மொந்தையை காட்டுக் கோழி வெஞ்சனத்தைக் கடித்து கொண்டே வயிற்றைக் நிரப்பி கொண்டு இருந்தான். களியும் கறியும் வயிறு  ரொம்பிக் கிடந்தது. குடிக்கும் பழக்கம் இல்லை சிவக்கொழுந்துக்கு..

    “..மாமோய்.. வூட்ல அப்பன் ஆத்தா உன்னை மறுபடியும் கட்டிக்கச் சொல்லுதுக..ஓன் மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கு தெரியல..”

    ராமலட்சுமியா இவ்வளவு தெளிவாக பேசுகிறாள் என்று தோன்றியது சிவக்கொழுந்துவுக்கு..

    ” எனக்கு பெருசா ஒடம்புல மனசுல‌ ஆச இல்ல மாமா..அவன் கூட அனுதெனமும் அல்லல் பட்டு ஒடம்பும் மனசும் புண்ணாக் கெடக்கு..பையனை உருப்படி பண்ணனும்..நீ அவனைப் படிக்க வைக்க உதவி செஞ்சது.. காலத்துக்கும் நான் நன்னிக் கடன் ஒனக்கு பட்டு இருக்கேன் மாமா..” விம்மி விம்மி அழுதாள்.

    சிவக்கொழுந்துவுக்கும் அழுகை தாளவில்லை. அவன் எதுவும் பேசவில்லை.

    மாசித் திருவிழா வந்தது.திருவிழாப் பூசையில் அவ்வளவு உக்கிரமாக சாமி ஆடினான் சிவக்கொழுந்து. எலுமிச்சம் பழத்தை வாயில் கடித்து இடுக்கிக் கொண்டு அப்படி சன்னதம் ஆடுகிறான். சட்டென்று ராமலட்சுமியை இழுத்து வந்தான்..கூட்டம் விக்கித்துப் போனது..

    “என்னப் பெத்த தாயி இவ..தாயி இவ.. என்னைத் தலச்சன் மகனா ஏத்துக்கோணும்.. தலச்சன் மகனா ஏத்துக்கோணும்..எம் மகனப் பெத்த தாயி இவ..தாயி இவ.. சங்கரப்பனை இழுத்து அணைத்து கொண்டான்.. படையாச்சி வம்சம் தழைக்க வந்த எம் மகனப் பெத்த தாயி..என்னப் பெத்த தாயி..”.

    சிவக்கொழுந்துவின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. ராமலட்சுமி மனசு பொறுக்காமல் விம்மி விம்மி அழுது கொண்டு இருந்தாள். இது எதுவும் புரியாத சங்கரப்பனின் கைகள் சிவக்கொழுந்துவின் கைகளுக்குள் இதமாக அடங்கி இருந்தது.